இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்று நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள்,அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது. இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும். அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக,தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 811 ஏக்கர் அரச காணிகளும் 21,942 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வாசவிளான் வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காணிகளில் பாதுகாப்புத் தேவைகளுக்கு அத்தியாவசியமான காணிகளைத் தவிர்ந்த ஏனைய காணிகளை மீள வழங்குவது தொடர்பிலும், நிரந்தரமாகத் தேவைப்படும் காணிகளுக்குப் பொருத்தமான தற்போதைய மதிப்பின் படி இழப்பீட்டை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும்இ சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.







