பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே இரத்து செய்க சர்வதேச மன்னிப்பு சபை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கைது மற்றும் தடுப்புக்காவல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை மேலும் தாமதமின்றி இரத்துச் செய்ய வேண்டும்’’ என்று அந்தச் சபை மேலும் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு அதில் மேலும்,

‘‘தற்போதைய அரசாங்கம் இந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக உறுதியளித்திருந்த போதிலும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுடனும் தரநிலைகளுடனும் பொருந்தாத அளவுக்கு பரந்த மற்றும் தெளிவற்ற விதிகளை கொண்ட இந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது கவலைக்குரியதாகும்.

சமீபத்திய சம்பவங்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தப்படும் விதம் குறித்த நீடித்துவரும் அச்சங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்று, 24 வயதுடைய தமிழ் ‘ஹிப்ஹாப்’ பாடல் கலைஞரான சங்கீதன் கணேஷ்குமாரின் வழக்காகும்.

அவர் ஜூன் 02ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு, அவர் நிகழ்த்திய ஒரு கலைநிகழ்ச்சி மற்றும் அது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை தொடர்பாக ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது நிகழ்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பெருமைப்படுத்துவதற்காக அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள பரந்த மற்றும் தெளிவற்ற குற்ற வரையறைகள், சர்வதேச சட்டத் தரநிலைகளுடன் ஒத்துப்போவதில்லை.

ஆகவே, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், சர்வதேச நியாயமான விசாரணைத் தரநிலைகளுக்கேற்ப உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படாவிட்டால், சங்கீதன் கணேஷ்குமார் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது.

அதே வாரத்தில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பிலும் குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றவில்லை. காவலில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பொதுவாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

அவர், 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். அந்தத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

இலங்கை அதிகாரிகள், அந்த கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். குற்றச்சாட்டுக்குரியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் அது உரிய சட்ட நடைமுறைகளையும் நியாயமான விசாரணை உரிமைகளையும் முழுமையாகப் பின்பற்றியதாக இருக்க வேண்டும்.

மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ள சில வழக்குகளிலும் பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது, அந்தச் சட்டத்தின் பயன்பாட்டு வரம்பும் நடைமுறையும் குறித்து மேலும் கேள்விகளை எழுப்புகிறது.

தற்போதைய வடிவத்தில், பயங்கரவாத தடைச் சட்டம் தன்னிச்சையான மற்றும் தவறான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் நிலையில் உள்ளது. குறிப்பாக, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைகள் நடைபெறக்கூடிய சூழலை இது உருவாக்குகிறது.

அதற்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தின் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகம் குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும்.

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்; மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக ‘சுரேஷ் சலே’ உட்பட, முழுமையான சட்ட நடைமுறைப் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்பதுடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை மேலும் தாமதமின்றி இரத்துச்செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Share this article

More News