வேலைவாய்ப்பு வழங்குவது மட்டுமே அரசியல் தீர்வாகாதுதமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பொதுவான விடயங்கள் சார்ந்து தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், உரிய அரசியல் பிரதிநிதித்துவமின்றி வெறுமனே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது மட்டுமே அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது என்றும் எடுத்துரைத்துள்ளனர்.
கடந்த வார தொடக்கத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச், அங்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனி சந்திப்புகளை நடத்தினார்.
அச்சந்திப்புகளின் போது, ஆட்சிப் பீடமேறிய ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் இன்னமும் அதை நடத்தாமல் தொடர்ந்து தாமதித்து வருவதாக ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், குறிப்பாக வட மாகாண சபை இயங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
அதேபோன்று, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும், புதிய அரசியலமைப்பு வரைவில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உள்ளடக்குதல் குறித்து தமிழ்த் தரப்புகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், தற்போது அதற்கு பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், முந்தைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட அளவுக்குக் கூட தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், அண்மையில் சர்ச்சைக்குள்ளான “ கிவுள்ஓயா” திட்டம் தொடர்பாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத காணி சுவீகரிப்பு முயற்சிகள் பற்றியும் ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் விளக்கமளிக்கப்பட்டது







