விஹாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சூனியம் செய்வதன் மூலம் இலங்கையின் எதிர்க்கட்சியினர் கேலிக்கூத்தாக மாறியுள்ளதாகவும் ஞானசார தேரர் தொடர்பான பிரச்சினையைப் பயன்படுத்தி ராஜபக்ஷ அணியினர் மீண்டும் அரசியல் ஆதரவைப் பெறவும், தேசியவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிறுத்தவும் முயற்சிக்கின்றனர் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டினார்.
மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
விஹாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டத்தின்போது சூனியம் செய்தல்; போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இவை இலங்கையின் பாரம்பரிய எதிர்க்கட்சியினர் எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடியையே வெளிப்படுத்துகின்றன.
அரசாங்கத்துடன் எதிர்க்கட்சியினர் நேருக்கு நேர் மோத விரும்பினால், அது கொள்கை அடிப்படையிலான போராட்டமாக இருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறானவை என எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்துமாறு கோருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதேபோன்று, மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டாமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவந்து மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் முயற்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடவேண்டும்.
ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகளை முன்னிறுத்துவதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினர் சூனியம் செய்கின்றனர். இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததா? பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரப்பட்டதா? ஜனநாயக விரோதமாகச் செயற்பட வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டதா? இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினரை நகைச்சுவைக்குரியவர்களாக மாற்றியுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தைத் தோற்கடிக்க முடியும் என்றால், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கால நெருக்கடிகளின்போது இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும்.
ஞானசார தேரர் தொடர்பான பிரச்சினையைப் பயன்படுத்தி ராஜபக்ஷ அணியினர் மீண்டும் அரசியல் ஆதரவைப் பெறவும், தேசியவாதத்தையும் இனவாதத்தையும் முன்னிறுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் இத்தகைய அரசியல் முயற்சிகளுக்கு ஏமாறக்கூடாது.
மறுபுறம், அரசாங்கமும் தனக்குச் சார்பாகப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் ஜனாதிபதி பதவியையும் கொண்ட அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அரசாங்கம் எதிர்க்கட்சிக்குப் பயப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, இரு தரப்பினரின் செயற்பாடுகளையும் மக்கள் விழிப்புடன் அவதானிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள் மக்களின் கவனத்திலிருந்து மறைக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றார்.







