மாகாண சபை முறைமை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான முக்கிய கருத்தாடல் அரங்கு இன்று (சனிக்கிழமை) காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்தாடல், அதன் 5வது கலந்துரையாடல் நிகழ்வாகும்.

இந்நிகழ்வில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள், அதிகாரப் பகிர்வு அவசியம், மலைநாட்டு மக்களின் அரசியல் மற்றும் சமூக வாய்ப்புகள், தென்னிலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, மாகாண சபை தேர்தலை உடன் நடத்த வேண்டிய அவசியம் முழு அதிகாரங்களையும் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம்,நிலையான அரசியல் தீர்வுக்கான வழிகள் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகள் குறித்து விரிவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கருத்துரைகள் வழங்கியவர்களில் ஓய்வு நிலை மூத்த நிர்வாக அதிகாரியும் சமூக ஆய்வாளருமான இரேனியல் செல்வின், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறுவுநர் பெரியசாமி முத்துலிங்கம், கொள்கை பகுப்பாய்வாளர் ஹரிந்திரா பி. திசாநாயக்க, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் அடங்குவர்.

இந்நிகழ்வு, தற்போதைய அரசியல் சூழலில் அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமை குறித்து புதிய பார்வைகளை உருவாக்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந் நிகழ்வில் DTNA கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















