
மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அமரர் சச்சிதானந்தன் பழனிசாமி அவரது இளமைக்காலத்தில் மலையக தோட்டங்களில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் முன்னனியில் நின்று கடமையாற்றியவராவர்.
1983 ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினை அடுத்து , அவர் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும், அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட MUST என்ற அமைப்பில், எமது செயளாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் ஆலோசனையின் பேரில் இணைந்து சேவை புரிந்தார். அக்கால கட்டத்தில் அவரை நாம் எல்லோரும் டாக்டர் போஸ் என்றே அழைப்போம்.
ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்ட டாக்டர் போஸ் , இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் நாடு திரும்பி , மலையகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து பல வருடங்களாக மக்கள் பணியில் ஈடுபட்டவர்.
ஈழப் போராட்டம் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் உட்பட இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் இவருடன் இணைந்து பணியாற்றிய பலருக்கும் இவரை பற்றி தெரிந்திருக்கும்.
சில வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்துடன் இணைந்து பணியாற்றி இருந்தார்.
அத்துடன் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக சேவை பணிகள், விவசாய உற்பத்திகள், ஆயூர்வேத பயிர் செய்கை, இந்திய இலங்கை நட்புறவு மன்றத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மட்டக்களப்பில் பணியாற்றிய இவர்.
திடீர் சுகவீனம் காரணமாக மீண்டும் இந்தியா சென்று அவரது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மதியம் 02.04.2026 தமிழ் நாடு சென்னையில் காலமானார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சக சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.







