
யதீந்திரா
தமிழர் அரசியலை முன்னிலைப்படுத்தி பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. தமிழ் மக்களுக்கான உரிமை என்பதுதான் அவற்றின் சாரம்சம். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயக நிலம், அதில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ வேண்டும் – இந்த அடிப்படையில்தான் 1949இல் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது. சிங்கள ஆட்சியாளர்களோடு காலத்திற்கு காலம், மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தமையின் விளைவாக தனிநாட்டுக் கோரிக்கை எழுந்தது. நமது அரசியல் வரலாற்றை ஒரு வரியில் பேசுவதாயின் இப்படித்தான் பதிவு செய்ய முடியும்.
அன்றைய சூழலில், சாதாரண மக்கள் மத்தியில் தனிநாடு என்பது கவர்சிகரமான ஒன்றாக இருந்தது – அதே வேளை இளைஞர்கள் மத்தியில் எழுச்சிகரமான ஒன்றாக இருந்தது. ஆனால் தனிநாட்டு கோசத்தை உயர்த்திப்பிடித்த அன்றைய தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் எவரிடமும் அதற்கான வேலைத்திட்டம் இருந்திருக்கவில்லை. ஆகக் குறைந்தது அதற்கான புரிதல் கூட அவர்களிடம் இருந்திருக்கவில்லை. தாங்கள் என்ன கூறுகின்றோம் – அதன் விளைவு என்ன என்பதை அறியாமலேயே அவைகள் பற்றி உணர்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
ஆனால் மறுபுறமாக அவ்வாறான உணர்ச்சிகரமான பேச்சுக்கள் ஒரு தலைமுறையையே ஆட்கொண்டது. அவர்கள் அதனை உண்மையாகவே நம்பினர். இதன் விளைவாகத் தோற்றம் பெற்றதுதான் ஆயுத அமைப்புக்கள். உணர்ச்சியின் விளைவாக இல்லம் துறந்த அன்றைய இளைஞர் குழுக்கள் இந்தியாவின் பயிற்சியின் விளைவாக இயக்கங்களானார்கள். அன்றைய அரசியல் சூழலில் அவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. பற்றிக் சறத்தோடு, உள்ளாடை கூடப் போடாமல் இருந்த பொடியள் விடுதலை இயக்களானார்கள். தாம் எதை நோக்கிப் போகின்றோம் – அதன் விளைவுகள் என்ன – ஒரு வேளை தாங்கள் தோல்வியுற்றால் என்ன நடக்கும் என்னும் கேள்விகள் அப்போது இருந்திருக்கவில்லை.
எங்கே செல்கின்றோம் என்று தெரியாமலேயே ஒரு பயணத்தில் தங்களை அர்ப்பணித்திருந்தனர். இதில் புரட்சி, சோசலிசம், என்றெல்லாம் கற்பனைகள் தாராளமாகவே இருந்தது. பொதுவாக இளைய வயதில் அப்படியான கிளர்சியூட்டக் கூடிய ஆசைகள் இயல்பானதும் கூட. ஒரு கட்டத்தில் எல்லாமும் முடிந்து போனது. எவரும் தேவையில்லை – நாங்கள் தனித்தே தமிழீழம் காண்போம் என்னும் நம்பிக்கையுடன் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பும் இறுதியில் மிச்சமின்றி அழிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவுடன் தமிழர் அரசியல் கோரிக்கை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது.
இதற்கு ஒரு அடிப்படையான காரணம் உண்டு. விடுதலைப் புலிகள் அமைப்பு ஏன் முற்றிலுமாக யுத்தத்தில் அழிக்கப்பட்டது? அதற்கு பின்னாலிருந்த காரணம் என்ன? விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் இலக்கு என்றால், ஏனையவர்களுக்கு மன்னிப்பு வழங்கியிருக்கலாம் அல்லது அவர்கள் ஜனநாயக அரசியலை நோக்கி வருவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கலாம் ஆனால் ராஜபக்ச நிர்வாகம் அவ்வாறு செய்யவில்லை – விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழிக்கும் ஒற்றை இலக்குடனேயே போரை முன்னெடுத்திருந்தது. அதில் பெற்றிபெற்றது. எந்தவொரு சர்வதேச போர் விதிகளும் பின்பற்றப்படவில்லை. சரணடைந்தவர்களில் முக்கியமானவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரையில் தெரியவில்லை. அவை தெரிந்துவிடக் கூடாது என்னுமடிப்படையில் மிகவும் நுட்பமாகவே அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் போரின் நோக்கம் என்ன?
200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிரஸ்ய போரியல் நிபுனர் ஜெனரல் கார்ல் வான் கிளாஸ்விட் (Prussian general Carl von Clausewitz) போர் தொடர்பில் எழுதிய நூல் இன்றும் உற்றுநோக்கப்படுகின்றது. வரலாற்றில் எவரை விடவும் போர் பற்றி அவர் கூறியிருப்பதாகவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க சஞ்சிகை ஒன்று அரிய நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு, ஜெனரல் கார்ல் வானுடன், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அமெரிக்க – ஈரான் போர் நகர்வுகள் தொடர்பில் உரையாடப்பட்டிருந்தது. போர் தொடர்பில் அவர் கூறும் ஒரு சில விடயங்களை எங்களுடைய சூழலுடன் பொருத்திப் பார்க்கலாம். அவர் கூறுகின்றார், போரின் இலக்கு என்பது அடிப்படையில் இராணுவ இலக்கல்ல மாறாக அரசியலே போரின் இறுதி இலக்காகும். அரசியலின் தொடர்சியே போர். அரசியல் இலக்கொன்றை அடைவதற்காகவே போர் முன்னெடுக்கப்படுகின்றது. அரசியல் இலக்கின் அடிப்படையிலேயே போரின் விளைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. அரசியல் இலக்கிற்கு ஏற்ப போர் மட்டுப்படுத்தப்படுகின்றது அல்லது விரிவுபடுத்தப்படுகின்றது.
இப்போது நமது விடயத்திற்கு வருவோம். விடுதலைப் புலிகள் அமைப்பை பூண்டோடு இல்லாமலாக்க வேண்டும் என்பது ஒரு அரசியல் இலக்காகும். இந்த இலக்கை அடைவதற்காகவே இத்தனை அழிவுகள் ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு எல்லைக்குள் முடக்குவதுதான் தென்னிலங்கையின் அரசியல் இலக்காக இருந்திருந்தால், போரின் விளைவுகளும் மாறுபட்டிருக்கும் ஆனால் அவர்களுடைய அரசியல் இலக்கோ விடுதலைப் புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியலை முற்றிலுமாக இல்லாமாலாக்குவதாகும் – அந்த அரசியல் இலக்கை ஒரு பேரழிவின்றி அடைய முடியாது. இந்த அடிப்படையில்தான் யுத்தம் புலிகளை முழுவதுமாக அழிப்பதுடன் முடிவுற்றது.
இதனை இன்னும் இலகுவாக புரிந்து கொள்வதாயின், விடுதலைப் புலிகளின் அரசியல் இலக்கு தனிநாடு ஒன்றை அடைவதாக இருந்தது. தென்னிலங்கையின் இலக்கு அந்த தனிநாட்டுக்கான அனைத்தையும் இல்லாமலாக்குவதாக இருந்தது. புலிகள் அமைப்பு ஆயுதத்துடன் இருக்கும் வரையில் அந்த அரசியல் இலக்கை தோற்கடிக்க முடியாது என்பதே கொழும்பின் அரசியல் இலக்காக இருந்தது.
இது தென்னிலங்கையின் முடிவு மட்டும்தனா அல்லது அது ஒரு உலகளாவிய முடிவா? எனது தேடலில், இது வெறுமனே தென்னிலங்கையின் முடிவாக மட்டும் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அவைகளுக்கு எவ்வித ஆதாரங்களையும் எவராலும் வெளிப்படுத்த முடியாவிட்டாலும் கூட, அரசியலை தர்க்கரீதியில் ஆராய்ந்தால், வெளிச்சக்கதிகளின் தலையீடுகள் இல்லாமல் அவ்வாறானதொரு முடிவை இலங்கை போன்றதொரு சிறிய நாட்டினால் எடுத்திருக்க முடியாது. அதாவது விடுதலைப் புலிகள் போன்றதொரு அமைப்பு றெதற்காசியாவில் தொடர்ந்தும் இருப்பது வெளித்தரப்புக்கள் எவருடைய நலன்களுக்கும் தேவைப்படவில்லை என்பதுதான் உண்மை.
இப்போது நமது அரசியலை திரும்பிப் பார்த்தால் நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்றுதான் – அதவாது, இந்தப் பின்னணியில் தென்னிலங்கை அரசியல் தீர்வு ஒன்றை தமிழர்களுக்கு வழங்கும் என்று, தமிழர்கள் எதிர்பார்க்கலாமா? உண்மையில் தென்னிலங்கையிடம் ஒரு நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது சரியானதா?
இந்த இடத்தில்தான் விடயங்களை ஆழமாகவும் நிதானமாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் நோக்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் சிந்திக்கும் தரப்பாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் நேர்மையாக விடயங்களை ஆராய முற்பட வேண்டும். விடுதலைப் புலிகள் பேச்சு வார்த்தையில் சமஸ்டியை ஆராய முற்பட்டதாக கூற முற்பட்டாலும் கூட, விடுதலைப் புலிகளின் தலைமை அதனை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதில் ஆச்சரியப்படவும் ஒன்றும் இல்லை. விடுதலைப் புலிகளின் தலைமையை அறிந்த அனைவருக்கும் அது நன்கு தெரியும்.
அண்மையில் ஜி.எல்.பீரிஸ் யாழ்ப்பாணத்தில் வைத்து அந்த விடயங்களை முன்வைத்திருந்தார். பீரிஸ் ஒரு நேர்மையான நபரல்ல – அவர் தொடர்பில் இந்தக் கட்டுரையாளர் அக்கறைப்படவில்லை ஆனால் இங்கு ஒரு விடயம் இருக்கின்றது அதாவது, சமஸ்டித் தீர்வில் கரிசனை இருந்திருந்தால், விடுதலைப் புலிகள் இல்லாமலாக்கப்பட்ட பின்னர் அதனை அரசாங்கம் முன்னெடுத்திருக்கலாம் அல்லவா! ஏன் அது நிகழவில்லை.
இந்த இடத்தில்தான், தமிழர்கள் ஒன்றை ஆழமாக கவனிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் அழிவின் மூலம், தனிநாட்டுக்கான அரசியல் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை மாறாக, சமஸ்டிக்கான – அரசியல் தீர்வுக்கான அரசியலும்தான் தோற்கடிப்பபட்டது. அப்படித்தான் தென்னிலங்கை கருதுகின்றது. சமஸ்டி மட்டுமல்ல எந்தவொரு தனியான அரசியல் ஏற்பாடும் தமிழர்களுக்கு தேவையில்லை அதன் குரலாக இருந்த புலிகளை நாம் அழித்துவிட்டோம் – பின்னர் எதற்காக இப்போது தீர்வு பற்றிப் பேச வேண்டும். இதுதான் தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு. ஏனெனில் தமிழர் வரலாற்றில் அரசியல் தீர்வு ஒன்றிற்காக தென்னிலங்கையுடன் பேரம் பேசும் பலத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே கொண்டிருந்தது. இதனை பலரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
அவ்வாறாயின் தமிழர்கள் என்ன செய்வது, எங்கிருந்து அரசியலை ஆரம்பிப்பது? இந்த நிலைமையை துல்லியமாக மதிப்பிட்டால் உங்களுக்கு முன்னால் ஒரேயொரு பதில் மட்டுமே இருக்கும். அதாவது, தற்போது எது சாதகமாக இருக்கின்றதோ அதுதான் தமிழர்களுக்கான ஒரேயொரு வாய்ப்பாகும்.
அது என்ன? மாகாண சபை ஒன்றுதான் தமிழர்களுக்குள்ள வாய்ப்பு. இந்த அடிப்படையில்தான் நாம் தொடர்ந்தும் இந்த யதார்த்தத்தை முன்வைத்து வருகின்றோம். ஆனால் உண்மைகளுக்கு மதிப்பில்லாத தமிழ்ச் சூழலில், பொய்கள் மீதான மயக்கமும் கவர்சியுமே மேலோங்கி இருக்கின்றது.
இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சிந்திக்கும் தரப்பினர், அவர்கள் உண்மையிலேயே சிந்திக்கும் தரப்பினராக இருந்தால் பொய்கள் மீதான மயக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உண்மை ஒன்றேயொன்றுதான், அதாவது அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை விடவும் உயர்வான ஒரு அரசியல் தீர்வு கானல் நீராகும். அதிலிருந்து முன்னோக்கி பயணிக்க முடியும் ஆனால் அதுவும் தமிழர்களின் கெட்டித்தனத்தினால் மட்டுமே சாத்தியப்படும்.
தற்போது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட நிற்பவர்களை நோக்கினால், தமிழர்களால் அதுவும் முடியுமா என்னும் கேள்வியுண்டு. ஆனால் இதுதான் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள அரசியல் உண்மை. ஏனைய அனைத்தும் பொய்யாகும்.
யுத்தத்தில் வெற்றிபெற்ற தென்னிலங்கை, அதன் பின்னரான சூழலில், அரசியலை தோற்கடிக்கும் நகர்விலும் கணிசமான வெற்றிகளை பெற்றுவிட்டது. அதன் முழுமையான வெற்றிக்கு தடையாக இருப்பது அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும்தான். அதனையும் எடுத்துவிட்டால் வெற்றி முழுமையடைந்துவிடும். பதின்மூன்றை இல்லாமலாக்க வேண்டும் என்று கூறும் தமிழ் குழுக்கள் யாரின் சேவகர்கள் என்பதை புரிந்து கொள்வதில் என்ன சிரமம் உண்டு?







