செம்மணி புதைகுழி 3வது அறிக்கை: எழுப்பும் கேள்விகளும் பார்வைகளும்

கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

ஏறத்தாழ 574 மனித எலும்பு எச்சங்கள் செம்மணி மனிதப்புதை குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான 3வது இடைக்கால அறிக்கையை தொல்லியலாளர் பேராசிரியர் ராஜ சோமதேவ மற்றும் அனுஷா வணிகசேகர ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர். அவர்களது ஆய்வின்படி,
1. எடுக்கப்பட்ட எச்சங்களில் 63 சதவீதமானவை சிறுவர்களும் சிசுக்களும் என கூறப்பட்டுள்ளது.
2. தொற்றுநோய்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரியளவு இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம். இதனை உறுதி செய்ய மேலதிக ஆய்வுகள் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
3. துப்பாக்கி சூட்டுக்காயங்கள் மற்றும் வாள்வெட்டுக்காயங்கள் போன்றவை சில எச்சங்களில் இருப்பதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வந்தன. ஆனால் அறிக்கை அவைபற்றி எதுவும் கூறவில்லை.
4. தொற்றுநோய்களால் பெரியளவு இறப்புகள் நிகழும் போது உடல்களுக்கு ஆடை அணிவிப்பதற்கு அவகாசம் இல்லாமல் அவசரமாக புதைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அறிக்கையின் மேற்கண்ட அவதானங்கள் பரந்தளவிலான இரண்டு கேள்விகளை எழுப்புகிறது.
1. வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் தொற்றுநோய் பேரழிவு மற்றும் இயற்கை அனர்த்த பேரழிவு கடைசியாக எந்த ஆண்டில் வந்தது என்பதைக் கூட கணக்கிலெடுக்காமல் எழுந்தமானமாக அறிக்கையிட்டுள்ளாரா? அல்லது அரசாங்கமோ, சிங்கள மேலாதிக்கவாத சக்திகளோ இராணுவத்தையும் முன்னைய ஆட்சியாளர்களையும் காப்பாற்றும் நோக்குடன் இவ்வாறு அறிக்கையிடும்படி அழுத்தம் கொடுத்தார்களா என்பது ஒன்று.
2. முழுமையான உண்மைகளைக் கண்டறிய மேலும் பலவகை அறிவியல் ஆய்வுகள் தேவை எனினும் தொற்றுநோய் அழிவு, இயற்கை அனர்த்த அழிவுகள் பற்றிய தரவுகள் இலகுவாக கிடைக்கிறது என்பதுடன் இவ்வெச்சங்களின் கால கட்டமும் கண்டுபிடித்திருக்க முடியும். இவை எவையும் கணக்கிலெடுக்கப்படாமல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை உண்மைகளை மறைப்பதற்கான முயற்சி என வலுவான சந்தேகத்தை தோற்றுவிப்பதுடன் இவ்விடயம் முழுமையாக சர்வதேச வல்லுனர்களின் மேலதிக ஆய்வும் விசாரணையும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டுகிறது.

63மூ எச்சங்கள் சிறுவர்கள், சிசுக்களுடையது என்ற கருத்து மீளாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. எச்சங்களை வைத்து வயதெல்லையை தீர்மானிக்கும் தொழில்நுட்பம் இலங்கையில் உண்டா என்பது தெரியவில்லை. ஆனால் இன அழிப்பின் ஓர் முக்கிய அங்கம் முடிந்தவரை சிறுவர்களை இளம் தலைமுறையை அழிப்பது. இதன்மூலம் ஓர் தலைமுறையை இல்லாமற் செய்வதன் மூலம் எதிரிகள் இல்லை அல்லது பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்யலாம். சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு இடம் பெயர்ந்த மக்களில் ஓர் பகுதியினர் மீண்டும் தமது வீடுகளுக்கு வந்து வாழத் தொடங்கிய 90 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் இராணுவக்கட்டுப்பாட்டில் செயப்படத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் 700 பேர் வரை காணாமலாக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு. அதேகால கட்டத்தில் செம்மணி இராணுவ தடுப்பரணில் பணியாற்றிய சோமவன்ச ராஜபக்ச என்கிற இன்று சிறையிலிருக்கும் இராணுவச்சிப்பாய் 400க்கு மேற்பட்ட இராணுவத்தினால் கைது செய்து கொல்லப்பட்ட உடல்களை தாம் புதைத்ததாகக் கூறியிருக்கிறார். எனவே இவ்வெச்சங்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களாகவே இருக்க முடியும். இதுதொடர்பான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அந்த அறிக்கையும் சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் அரச அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
1800களின் முற்பகுதியில் காலராவினால் சிலர் இறந்தமைக்கு பின்னர் தொற்றுநோய் இறப்பு என பாரிய அளவில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக வரலாறு இல்லை. கொரோனா என்பது மிக அண்மைக்கால தொற்றுநோய். இதில்கூட யாழ்.மாவட்டத்தில் வெகுசிலரே இறந்தனர். எனவே தொற்றுநோயால் 500க்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் இறந்த வரலாறே இல்லை எனும் போது பேராசிரியர் எந்தளவுக்கு அலட்சியமாகவும் பொறுப்பின்றியும் பாமரர் போல் அறிக்கை தயாரித்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
மேலும் எந்த ஓர் எச்சங்களும் ஆடையற்றோ அல்லது உக்கிய ஆடைகளின் துணிக்கைகளோ இல்லாமலே இருந்திருக்கின்றன. இதற்கு தொற்றுநோயால் இறந்தவர்களைப் புதைக்கும் அவசரத்தில் ஆடை பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது. ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக தொற்றுநோய்ப் பேரழிவு யாழ்ப்பாணத்தில் ஏற்படவே இல்லை என்பதை மேலே பார்த்தோம். மேலும் சிந்து பாத்தி மயானம் ஓர் சைவர்களின் மயானமாகும். சைவர்கள் உடலை புதைப்பதில்லை எரிப்பார்கள். அரிதாகவே சில உடல்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதைக்கப்படுவதுண்டு. எனவே இந்த மிக வெளிப்படையான உண்மையைக்கூட இந்த அறிக்கையாளர் கணக்கிலெடுக்கவில்லை என்பது ஆச்சரியமானது மட்டுமன்றி உண்மையும் புதைக்கப்படுமா என்ற அச்சத்தையும் தோற்றுவிப்பதாகும். எனவே ஆடைகளின்றி நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டமையும் அவை அதிகபட்சம் ஒரு மீட்டர் ஆழத்திலேயே புதைக்கப்பட்டிருப்பதும் இராணுவம் சித்திரவதை செய்து கொன்று அவசரமாக புதைத்திருக்கலாம் என்பதற்கான வலுவான சந்தேகங்களையே எழுப்புகிறது. ஆனால் இத்தகைய ஓர் ஐயத்தைக்கூட அறிக்கை வெளிப்படுத்தாமை திட்டமிட்ட செயலாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தம் போன்ற காரணிகளால் இவ்வாறு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டமை சுனாமி அனர்த்தத்தின்போது மட்டுமே. ஆனால் வடக்கில் சுனாமியால் இறந்தவர்களின் உடல்கள் கடலை அண்டிய பகுதிகளிலேயே பெரும்பாலும் கூட்டாக அடக்கம் செய்யப்பட்டு சமாதிகளும் எழுப்பப்பட்டன. இதில் பெருமளவானோர் கத்தோலிக்கர்களே. எனவே சமாதிகள் எழுப்பப்பட்டு ஆண்டு தோறும் அஞ்சலி செய்யப்படுகிறது. இதுவும் பரகசியமான விடயம். ஆகவே இத்தகைய பொது அறிவு இல்லாத சிறுபிள்ளைத்தனமான கூற்றுக்களைக் கொண்டதாக இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை பேராசிரியர் மீதும் ஆட்சியாளர் மீதும் மிகுந்த மனக்கிலேசத்தையும் அவநம்பிக்கையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
இவ்வெச்சங்கள் சிலவற்றில் துப்பாக்கிச்சூட்டுக்காயங்கள் மற்றும் வாள்வெட்டுக்காயங்கள் போன்றவை காணப்படுவதாக அவ்வப்போது ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் இவைபற்றி அறிக்கை எதுவும் கூறவில்லை. கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தைக்கூட அறிக்கை வெறிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அறிக்கையாளர்கள் உண்மைகளை மூடிமறைக்கவும் மிகக்கொடியதான இவ்விடயத்தை மடைமாற்றவும் முயற்சித்திருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
இவை தவிரவும் எச்சங்களோடு எடுக்கப்பட்ட பல்வேறு சான்றுப்பொருட்கள் காலக்கணிப்பிடப்படவோ அல்லது எச்சங்களுடன் தொடர்புபடுத்தியோ பகுப்பாய்வு செய்யப்படாமலே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போதே இவ்வளவு வெளிப்படையான தவறுகளும் குறைபாடுகளும் கொண்ட இவ்வறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
எப்போது அறிக்கையும் அறிக்கையாளரும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்களோ அப்பொழுதே செம்மணி புதைகுழி விசாரணையும் உண்மைகளை வெளிக்கொணர்வதும் நீதியை நிலைநாட்டுவதும் சர்வதேச வல்லுனர் குழுவால் செயற்படுத்தப்பட்டாலன்றி சாத்தியமில்லை.
செம்மணி புதைகுழி விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் அகழ்வு விடயங்களைப் பார்த்துச் சென்றுள்ளனர். கனடா மற்றும் பிரிட்டன் ஆட்சியாளர்கள் இதுவிடயத்தில் இலங்கை அரசு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளன.
பல நாடுகள் தனிப்பட்ட முறையில் இவ்விடயத்தில் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. எனவே பொருத்தமான சர்வதேச தலையீட்டுக்கான செயற்திட்டங்களை தமிழ்க்கட்சிகள் சமூக அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள் செயற்படுத்த முன்வர வேண்டும்.
நடுநிலையானதும் பல பரிமானங்களிலானதுமான பூரண விசாரணை இவ்விடயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு சர்வதேச வல்லுனர் குழு இதனைக் கையாள்வதன் மூலமே முழுமையான நீதிநிலைநாட்டல் சாத்தியமாகும். சட்ட ஆட்சி, சுயாதீன நீதித்துறை இனவாதமற்ற ஆட்சி என தம்மை வர்ணித்துக்கொள்ளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச வல்லுனர் குழு விசாரணையை ஏற்று செயற்படுத்துவதன் மூலமே தம்மை நிரூபிக்க முடியும். நிரூபிப்பார்களா?

Yahoo Mail: Search, Organize, Conquer

Share this article

More News