விஹாரமகாதேவி பூங்காவில் முறுகல்: தேரர்களின் கொடிகளை அகற்ற முற்பட்ட மாநகர சபை!

விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சத்தியாக்கிரகப் பகுதியில் தேரர்களால் நிறுவப்பட்டிருந்த பௌத்தக் கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு மாநகர சபை அதிகாரிகள் முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறும், இல்லையெனில் அவற்றுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறும் பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அவ்வாறு செய்யத் தவறினால், தாங்களே அவற்றை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அதிகாரிகள் சில பதாகைகளை அகற்றியபோதிலும், அங்கிருந்த தேரர்களும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் நிறுவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share this article

More News